உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு மிகப் பெரும் சவாலாக விளங்குவது தீவிரவாதம். ஒவ்வொரு நாடும் பாதுகாப்புக்கே பெரும்பகுதி நிதியை செலவிடுகிறது.
இந்தியாவில் புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 13) இரவு 7.30 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் துப்பு துலங்கப்படவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே ஒரு அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது. அதே போல் மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் உள்ள சில்டாவில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் செவ்வாயன்று (பிப்ரவரி 16) 25 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்தியா வரக் கூடாது என்று விளையாட்டு வீரர்களுக்கும் ஹஜ் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
உலகில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகளும் சாதாரண அப்பாவி மக்கள் உள்பட உயிர்களையே பலி கேட்கின்றன. ஏன் இந்த வெறி? இதனால் இவர்கள் சாதித்தது என்ன?
தீவிரவாதத்தை ஆதரிப்பதாக கூறப்படும் பாகிஸ்தானும் கூட தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு அடக்குமுறை கிடையாது. ஒவ்வொருவரின் தேவைகளை கேட்கவும், அதற்காக போராடவும் உரிமை உண்டு. இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது மிகவும் வேதனையானது.
எந்த மத தீவிரவாதமாக இருந்தாலும் அப்பாவி மக்களை கொன்றால் அவர்கள் நினைத்தது நடந்து விடுமா? ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு "எச்சரிக்கை விடுவதற்காக" என்று ஒரு அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றன. உங்களின் எச்சரிக்கைக்கு சாதாரண அப்பாவி மக்களின் உயிர்கள் தேவையா?
வன்முறையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. வன்முறை மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுவார்கள். அவர்களை புறந்தள்ளக் கூடிய சூழலே நிலவும். இவர்கள் கொள்கை உண்மையாக மக்களின் நலனுக்காக இருக்கவே முடியாது.
நமது இந்த உலகம் பல்வேறு காலமாற்றத்தால் இயற்கை இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த சவால்களிலிருந்து நாம் முன்னேற வேண்டிய கட்டாயம் முன்னே உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தப்பட வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் தீவிரவாத இயக்கங்கள் மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைக்காக ஜனநாயக வழியிலான போராட்டத்தில் இறங்க வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூக உண்டாக்க போராட்டமே தீர்வு.
எனவே, தங்களின் தாக்குதல்களை கைவிட்டு அமைதியான சூழலுக்கு வாருங்கள்... பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்... முடியாவிட்டால் மக்களை திரட்டி வீதியில் இறங்குகள்... அதுவே உங்களை மக்களின்பால் ஈர்க்கும். உங்கள் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வெல்லும்.
அதிருப்தியடைந்தவர்கள் எல்லாம் துப்பாக்கி ஏந்தினால் இந்நாடு சுடுகாடாகத்தான் காட்சியளிக்கும். இரத்த சகதியில் எதை தேடப்போகிறார்கள் என்பதை சற்று சிந்திக்கவும்....


No comments:
Post a Comment