February 12, 2010

கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறதா?

பிப்ரவரி 14 காதலர் தினம்.
உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் காதலர் தினமும் ஒன்று.
காதல் என்பது இல்லாத இடமே கிடையாது; காதல் இல்லாதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது; ஒருவனை பக்குவப்படுத்துவதும், சீர்படுத்துவதும் காதல்தான்; இனம், மதம், மொழி, நாடு என பல்வேறுபட்டோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அற்புதம் தான் காதல் என்கிறார்கள் சிலர்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் "கலாச்சாரத்தைச் சீரழிப்பதா" கூறிக் கொண்டு ரகளையில் ஈடுபடுகின்றனர் சில அமைப்பினர்.
அதில் தீவிரமாக ஈடுபடும் ஸ்ரீராம சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் என்பது மீது கரி பூசி 6 இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதற்கு பதிலடியாக பஸ்சை கொளுத்துவதும், கலகத்திலும் ஈடுபடுவதுமாக தொடங்கியுள்ளது ஸ்ரீராம சேனா அமைப்பு.
"காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம். இத்தினத்தை கொண்டாடுபவர்கள் மீது எங்கள் அமைப்பினர் தாக்குவார்கள்" என்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக் பகிரமங்கமாக மிரட்டியுள்ளார்.
இந்த ஸ்ரீராம சேனா அமைப்பினர்தான் கடந்த ஆண்டு நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து கொடூரமாக தாக்கி கலவரம் புரிந்தவர்கள். தற்போது மீண்டும் தங்கள் பல்லவியை ஆரம்பித்துள்ளனர்.
காதலர் தினம் என்ற பெயரில் ஒரு சில தவறான நடவடிக்கைகளை நடக்கிறது என்றாலும் கூட, காதல் என்பது ஒரு அற்புதம். நமது இதிகாசத்திலும், வரலாறுகளிலும் காதலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. காதல் மேற்கத்திய கலாச்சாரமாக நாம் பார்க்க வேண்டியம் அவசியம் கிடையாது. அது எல்லோர் மனதிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்த ஒன்று. அந்த தினத்தை கொண்டாடுவது இயல்பான ஒன்றுதான்.
ஸ்ரீராம சேனா போன்ற இயக்கங்கள் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது வேதனையானது; "கலாச்சாரத்தின் காவலர்கள் நீங்கள்" என்று யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. உங்கள் கலாச்சாரம் குறித்து பொதுமக்களிடையே பிரச்சாரம் மூலம் வலம் வாருங்கள். அதுதான் சிறந்தது.
அதைவிட்டு விட்டுவிட்டு மற்றவர்களின் உரிமைகளிலும், தனிப்பட்ட வாழ்விலும் தலையிட்டு வன்முறை புரிவதை கைவிடுங்கள். காதலர் தினத்தில் மட்டும்தான் மேற்கத்திய கலாச்சாரம் உள்ளதா என்று சற்று நன்கு யோசியுங்கள்? வன்முறையில் ஈடுபடுபவர்களா கலாச்சாரத்தின் காவலர்கள்?

No comments: