February 09, 2010

வேலி பயிரை மேய்கிறது

2010 பிப்ரவரி 8ம்தேதி திங்களன்று மதியம் 1.05 மணியளவில் ரகசிய விசாரணையை முடித்து கொண்டு பஞ்ச்குலா நீதிமன்றத்திலிருந்து வெளியே காரை நோக்கி நடந்தார் முன்னாள் டிஜிபி ஷாம்பு பிரதாப் சிங் ரத்தோர்.
காரை நெருங்கும் முன்பு ரத்தோரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்த தருணத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இளம் பத்திரிகையாளர் தனது தாக்குதலை தொடுத்தார்.
ஆம். ரத்தோரின் முகத்தில் அந்த இளைஞன், தான் வைத்திருந்த கத்திகை கொண்டு 3 முறை தாக்கினார்.
இதில் காயமடைந்த ரத்தோர் கைக்குட்டையை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
அந்த இளைஞரின் கோபத்திற்கு என்ன காரணம்?
ருச்சிகா கிர்ஹோத்ரா. 1990ம் ஆண்டு 14 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி. அவர் டென்னிஸ் விளையாட்டு பிரியரும் கூட.
1990 ஆகஸ்ட் 11 அன்று ரத்தோர், ருச்சிகாவின் வீட்டிற்கு வருகிறார். ருச்சிகாவின் டென்னிஸ் விளையாட்டிற்காக சிறப்பு பயிற்சி அளிக்க தான் ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதிபட ருச்சிகாவின் தந்தையிடம் கூறுகிறார்.
1990 ஆகஸ்ட் 12 (ஞாயிறு) அன்று ருச்சிகாவும், அவரது சிநேகிதி ஆராதனாவும் ரத்தோரை சந்திக்கிறார்கள். அப்போது ஆராதனாவை பயிற்சியாளரை அழைத்து வர சொல்லி வெளியே அனுப்பி வைக்கிறார் ரத்தோர். அச்சமயத்தில் அந்த சிறுமியிடம் ஈனச் செயலில் ரத்தோர் ஈடுபடுகிறார். பின்பு மிரட்டி அனுப்பி வைக்கிறார்.
இந்த ஈனச் செயலை செய்த 50 வயதான முதியோருக்கு என்ன தண்டனை கிடைத்தது?
இந்த சம்பவத்திற்கு பிறகு ருச்சிகா, அவரது குடும்பத்திற்கும், அவரது சிநேகிதி ஆராதனா குடும்பத்திற்கும் கடுமையான தொல்லைகளை கொடுத்து வந்தார். ருச்சிகாவின் அப்பா மீதும், அவரது 10 வயதே ஆன தம்பி அசு மீதும் கிரிமினல், திருட்டு, கொலை வழக்குகளை பதியப்பட்டன.
இந்த சம்பவங்களுக்கு உறுதுணையாக சப் இன்ஸ்பெக்டர் பிரேம் தூத், துணை சப் இன்ஸ்பெக்டர் சேவா சிங், சிஐஏ பணியாளர் ஜெய் நாராயண் ஆகியோரை ரத்தோர் பயன்படுத்தியுள்ளார்.
பின்பு 1993 டிசம்பர் 28 அன்று ருச்சிகா வருத்தம் தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் அவர் மரணமடைந்தார். அந்த கேள்வி பட்ட அரக்கன் ரத்தோர் விருந்தளித்து கொண்டாடினார் அன்று இரவு.
ஒரு உயிர் பலி அவனுக்கு கொண்டாடத்தையா தருகிறது...? எப்படியெல்லாம் இந்த கோணபுத்திக்காரன் யோசிக்கிறான்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை பெறுவதற்கு வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றுக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் அந்த சிறுமியின் பெயர் ரூபி என்றும், அவரது தந்தை பெயர் சுவாஷ் சாந்தர் காத்ரி என்றும் எழுதப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் இறப்புக்கு பின் அரசு ரத்தோர் மீதான வழக்குகளை முடித்து கொண்டது.
1994 நவம்பரில் ரத்தோர் இணை டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அப்போது ஹரியானா மாநில முதல்வராக பஜன் லால் இருந்தார்.
1999 அக்டோபரில் இந்திய தேசிய லோக் தள் அரசின் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இருந்தபோது டிஜிபியாக ரத்தோர் உதவி உயர்வு பெற்றார்.
2000-ல் பிஜேபி துணைத் தலைவர் சாந்தகுமார், "ரத்தோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடிதம் எழுதினார்.
இப்படி முயற்சிகள், இழுத்தடிப்பு, விசாரணை என 19 ஆண்டுகள் கழிந்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய சிபிஎம் தலைவர் பிருந்தா காரத், "19 ஆண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட ரத்தோருக்கு 6 மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. 10 நிமிடத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பது என்ன நியாயம்?" என்று பேசினார்.
இந்த பின்னணியில் பல்வேறு இடங்களில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக மீண்டும் விசாரணை தீவிரமானது.
ரத்தோர் பொதுமக்களை பாதுகாக்கும் ஒரு உயர்ந்த இடத்தில் இருந்தவர். ஆனால், "வேலியே பயிரை மேய்ந்த கதையாக" ஒரு காவல்துறை அதிகாரியே இந்த ஈனச் செயலில் ஈடுபட்டது வெட்கக்கேடு; கடுமையாக தண்டிக்கப்படக் கூடியது.
ஆனால், அதே நேரத்தில் தப்பு செய்தவருக்கு தண்டனையை அனுபவிக்காதது மட்டுமின்றி, அவருக்கு பதவி உயர்வு மூலம் புகழ் மாலையே சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு இளைஞன் ரத்தோரின் (தற்போது வயது 68) முகத்தில் கத்தியால் குத்தியிருப்பது சரியென்றே படுகிறது.
சட்டத்தின் பல்வேறு வழிகளை பயன்படுத்தி தான் செய்த தவறுக்கு வருந்தாமல் சிரித்து கொண்டு வலம் வரும் போது எல்லோருக்கும் கோபம் என்ற உணர்வே ஏற்படுகிறது.
இதுபோன்று பல்வேறு தவறுகளை செய்துவிட்டு, வழக்குகளில் தப்பிக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்கும் இதுபோன்றவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்; இதை அரசே செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

No comments: