March 16, 2010

லாபத்தை நீ எடுத்துக்கோ.... நஷ்டத்தை நான் தர்றேன்....!

இந்தியா வளர்ந்து வரும் ஒரு நாடு. இந்த நாட்டிற்கு அணுசக்தி கட்டாய தேவையும் ஆகும்.

இந்த நிலையில் திங்களன்று நாடாளுமன்றத்தில் அணு இழப்பீடு மசோதா என்ற ஒன்றை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வர முடிவு செய்திருந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா என்ன சொல்கிறது....
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுடன் அணுசக்தி உடன்பாடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இப்படி வெளிநாடுகள் மூலம் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு தொடர்பான “அணுசக்தி இழப்பீடு மசோதா” தான் அறிமுகப்படுத்த காங்கிரஸ் முனைந்தது.
என்ன இழப்பீடு...?
அணு உலை விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம், பாதிப்புக்கு ஈடாக ரூ.300 கோடி அளவிற்கு மட்டும் இழப்பீடு அளித்தால் போதும் என்று இந்த மசோதா வரையறை செய்கிறதாம்.
அதாவது, இந்த மசோதாவின்படி, அணுவிபத்து நேருமானால், அந்தவிபத்திற்கான இழப்பீடாக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 200 கோடி அளிக்கப்படுமாம். இதில், அணு உலையை செயல்படுத்தும் நிறுவனம் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி அளவிற்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்டால் போதுமாம். அப்படியானால் மீதித் தொகையை யார் தருவது.. அரசுதான்... வேறு யாரு....

மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும் யாரும் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு செல்வதை இந்த மசோதா தடுத்துநிறுத்துகிறதாம்...
அணு உலை விபத்து ஏற்பட்டால், இந்தியாவில் அது அமைந்திருக்கும் பகுதியில் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் நன்கு தெரிந்ததே. ஆனால் அந்தப் பேரழிவுக்கு ஈடாக, சம்பந்தப்பட்ட வெளி நாட்டு அணுசக்தி நிறுவனம் வெறும் ரூ.300 கோடி இழப்பீடு கொடுத்தால் போதுமானதென்று கூறி, வெளிநாட்டு அணுசக்தி நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த மசோதாவை தாக்கல் செய்ய முனைகிறார்கள். இந்த மசோதாவிற்கு கடந்த நவம்பர் 20ம்தேதியே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டனராம்.
இன்னொரு விஷயம், தற்போது அமலில் உள்ள இந்த அணுசக்தி சட்டம் - 1962ன்படியானதாம். அதன்படி இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்தி கழகம் மட்டுமே இந்தியாவில் அணுமின் உலைகளை அமைக்க முடியும் என்று உள்ளதாம். இதைத்தான் இப்ப மாற்ற துடிக்கிறார்கள்.
இதை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதாம்.
இதற்கு முன்பு போபால் விஷ வாயு தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டதும், உயிரிழந்ததும் நினைவிருக்கலாம். இப்படியிருக்கையில் யாருடைய நலனுக்காக இந்த மசோதா கொண்டு வர இவர்கள் துடிக்கிறார்கள்...?
இது எப்படி இருக்குது என்றால்... லாபம் வந்தால் நீ எடுத்துக்கோ... நஷ்டம் என்று வந்தால் உனக்காக நான் இருக்கிறேன் என்று வெளி நாட்டு நிறுவனங்களுக்கு கோடி கோடியாய் தாரை வார்க்க இந்த அரசு தயாராக உள்ளது. மக்கள் நலன் என்றால் என்ன என்று விரைவில் கேட்பார்களோ!