ஜோதிபாசு 1914-ம் ஆண்டு ஜூலை 8ம்தேதியன்று கல்கத்தாவின் ஹாரிசன் சாலையில் (இப்போது மகாத்மா காந்தி சாலை) உள்ள 43/1 ம் எண் வீட்டில் டாக்டர். நிசிகாந்தா பாசு மற்றும் திருமதி. ஹேமலதா பாசு ஆகியோரின் மூன்றாவது புதல்வனாகப் பிறந்தார். ஜோதிபாசு பிறந்தபோது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஜோதிரீந்திர பாசு என்பதாகும். பள்ளியில் சேர்க்கும் போது பெயரைச் சுருக்கி அவர் தந்தை ஜோதிபாசு என்று மாற்றினார். வீட்டில் அவரை ‘கானா’ என்றே செல்லமாக அழைத்தனர்.
ஜோதிபாசுவின் தந்தை நிசிகாந்தா பாசு ஒரு மருத்துவர். அவரது பூர்வீகம் கிழக்கு வங்காளத்தின் டாக்கா மாவட்டத்தில் உள்ள பரோடி என்ற சிறு கிராமம். பின்னர் கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார். 1917 ம் ஆண்டில் ஜோதிபாசுவின் பெற்றோர் பழைய ஹிந்துஸ்தான் கட்டிடம் என்று அழைக்கப்பட்ட (தற்போது ஃபட்னானி சேம்பர்) அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் 1920 ம் ஆண்டு கல்கத்தா ஹிந்துஸ்தான் சாலையில் சொந்த வீட்டில் குடியேறினர். 1920ம் ஆண்டு 6 வயதில் ஜோதிபாசு கல்கத்தா தர்மடாலாவில் உள்ள லோரெடோ பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு நான்கு ஆண்டுகள் தனது மழலைக்கல்வியைக் கற்றார். பின்னர் 1925 ம் ஆண்டில் புனித சேவியர் பள்ளியில் 2ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் தற்போது பிரெசிடன்சி கல்லூரி என்று அழைக்கப்படும் இந்து கல்லூரியில் ஆங்கிலம் (ஹானர்ஸ்) வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்ற நண்பராக விளங்கியவர் ரஹ்மான் என்பவர். இருவரும் வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்வதையே பெரிதும் விரும்பினர். 1935ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஜோதிபாசு பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அதே ஆண்டில் லண்டனுக்குப் பயணமானார்.
லண்டன் வாழ்க்கைமாணவர் ஜோதிபாசுவின் லண்டன் வாழ்க்கை சுவாரஸ்யமானது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞரான பேராசிரியர் ஹரால்டு லாஸ்கி என்பவர் அப்போது லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரம் குறித்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். அவரது உரைகளால் ஈர்க்கப்பட்ட ஜோதிபாசு அடிக்கடி அங்கு சென்று வந்தார். அதே சமயத்தில் இங்கிலாந்தில் வசித்த இந்திய மாணவர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான அரசியல் நடவடிக்கைகளில் 1936 முதல் 1940 வரை (ஏறக்குறைய லண்டனில் இருந்த காலகட்டம் முழுவதுமே) ஈடுபட்டார். இதுதான் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அச்சாணியாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பிரிட்டன் இந்திய மாணவர்களின் கூட்டமைப்பான இந்தியா லீகில் 1937 ம் ஆண்டு ஜோதிபாசு உறுப்பினரானார். மேலும் லண்டன் மஜ்லீஸ் என்ற அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.
இந்த அமைப்புகள் இங்கிலாந்தில் இந்திய விடுதலைக்கு ஆதரவாக நடந்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. 1938 ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு லண்டன் சென்றபோது அவரை வரவேற்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஜோதிபாசுவிடம் அளிக்கப்பட்டது. இதை ஜோதிபாசு சிறப்பாகச் செய்தார். இதேபோல் திரிபுரி காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், லண்டன் சென்றபோது மஜ்லிஸ் அமைப்பின் சார்பாக நடந்த வரவேற்புக் கூட்டத்தையும் சிறப்பாக நடத்தினார். இவ்வாறு இங்கிலாந்து வந்த இந்தியத் தலைவர்களை வரவேற்றது மட்டுமல்லாமல், லண்டன் தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட முற்போக்கான தலைவர்களுடன் அவர்களையும் இணைத்து கூட்டங்களை நடத்தினார்.
பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடன்இந்தக் காலகட்டத்தில் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது தொடர்புகள் வலுப்பட்டன. ஆனால் அக்கட்சியில் தானும் இணைய வேண்டும் என்ற ஜோதிபாசுவின் விருப்பம் நிறைவேறவில்லை. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹாரி பாலிட் என்பவரிடம் ஜோதிபாசு தனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, “இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருப்பதால் நீங்கள் நாடு திரும்பும்போது சில பிரச்சனைகள் வரும். எனவே இப்போது வேண்டாம்,’’ என்று கூறி அவர் மறுத்து விட்டார். ஆனால் ஒரு பார்வையாளராக ஜோதிபாசு கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களுக்கு தொடர்ந்து சென்று வந்தார். ரஜினி பாமி தத் உள்ளிட்ட சிறந்த மார்க்சிய அறிஞர்களின் பேச்சை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அப்போது அவருக்குக் கிட்டியது.
அடித்தட்டு மக்களுடனான முதல் அனுபவம்இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள சேரிப்புறங்களில் வசித்த இந்திய மாலுமிகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தரும் பொறுப்பை ஜோதிபாசுவிடம் அளித்தது. இப்பணிக்காக மாணவர் குழு ஒன்றை உருவாக்கிய ஜோதிபாசு, நல்ல முறையில் அதனைச் செய்து முடித்தார். இதுதான் அவர் படிப்பறிவற்ற, ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகிய முதல் அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்தியாவில்இத்தகைய பரபரப்பான அரசியல் வாழ்க்கைக்கு இடையே படிப்பிலும் கவனத்தைச் செலுத்திய ஜோதிபாசு, 1939ம் ஆண்டின் இறுதியில் வெற்றிகரமாக பாரிஸ்டர் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1940 ம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று பம்பாய் வழியாக கல்கத்தா வந்தடைந்தார். அவரது வருகை குடும்பத்தாருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தனது எதிர்கால வாழ்க்கைத் திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்றுவதுதான் என்று ஜோதிபாசு கூறியது அவர்களை வாயடைத்துப் போகச் செய்தது. ஜோதிபாசுவை அரசியலில் ஈடுபட விடாமல் தடுக்க சில வழிகளில் முயற்சித்தனர். ஆனால் அவை பலனளிக்கவில்லை.
இல்லற வாழ்க்கைஇந்நிலையில் 1940ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜோதிபாசு- வசந்தி கோஷ் திருமணம் நடந்தது. இந்த மணவாழ்க்கை மிகக்குறுகியது என்பதுதான் சோகமானது. திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையில் 1942ம் ஆண்டு மே மாதம் 11 ம் தேதியன்று திடீரென்று வசந்தி கோஷ் காலமானார். அவரது மரணம் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. எனினும் ஜோதிபாசுவின் அன்னை ஹேமலதாவை தீவிரமாகவே வாட்டியது. மிகுந்த கவலையடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சில மாதங்களுக்குப் பின்னர் இயற்கை எய்தினார்.
இதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 1948ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி ஜோதிபாசு கமல்பாசுவை மணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1951 ம் ஆண்டில் முதலாவதாகப் பிறந்த பெண்குழந்தை சில நாட்களிலேயே வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தது. அதன்பிறகு கோகா என்று செல்லமாக அழைக்கப்பட்ட சந்தன் 1952 ல் பிறந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் பணி1940 ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. ஆயினும் ஜோதிபாசு கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரிடம் தொடர்புகளைப் பராமரித்து வந்தார். கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த தலைவர்களுக்கு தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற பொறுப்புகள் அப்போது ஜோதிபாசுவிற்கு அளிக்கப்பட்டன. இதனைச் சிறப்பாகச் செய்த அவர் வெளியில் இருந்த தலைவர்களும், தலைமறைவாக இருந்தவர்களும் தகவல்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள ஒரு இணைப்புப் பாலமாக விளங்கினார். நல்ல பெயரை இது அவருக்கு ஈட்டித்தந்தது.
1943ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ மாநாடு நடந்தது. இதில் பிரதேசக்குழு அமைப்பாளர் என்ற பொறுப்பு ஜோதிபாசுவிற்கு வழங்கப்பட்டது. நான்காவது மாநில மாநாட்டின்போது அவர் பிரதேசக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ம் ஆண்டு காந்திஜி பெலிகட்டாவிற்கு வந்தபோது அவரை பூபேஷ் குப்தாவுடன் சென்று சந்தித்த ஜோதிபாசு, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு அமைதிக்குழு ஏற்படுத்தி அமைதிப் பேரணி நடத்துவது தொடர்பாக அவரது ஆலோசனைகளைப் பெற்றார்.
மாநிலச் செயலாளராக...விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்திருந்தது. அத்தடை 1951 ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்த ஆண்டில் ஜோதிபாசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கமொழிப் பத்திரிகையான ’ஸ்வாதினாட்டா‘ வின் ஆசிரியர் குழுவின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 ம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1954 ம் ஆண்டு மதுரையில் நடந்த அகில இந்திய மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்வானார். பாலக்காடு மாநாட்டில் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், 1958 ம் ஆண்டு அமிர்தசரசில் நடந்த அகில இந்திய மாநாட்டில் தேசியக்குழு உறுப்பினரானார்.
மார்க்சிஸ்ட் கட்சியில்...1964 ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 தலைவர்களுள் ஜோதிபாசுவும் ஒருவர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபோது அதன் மத்தியக்குழுவிற்கும், அரசியல் தலைமைக்குழுவிற்கும் ஜோதிபாசு தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் இந்த இரு பொறுப்புகளிலும் தொடர்கிறார். அதேபோல் மேற்குவங்க மாநிலக்குழுவிலும், மாநில செயற்குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.
தொழிற்சங்கப் பணிகளில்...ஜோதிபாசு சிறந்த தொழிற்சங்கத் தலைவராக மிளிர்ந்தவர். 1941 ம் ஆண்டு பி.ஏ ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகச் செயல்பட்டார். அத்துடன் துறைமுகத் தொழிலாளர்களுடனும் பணியாற்றி சில அனுபவங்களைப் பெற்றார்.
1944 ம் ஆண்டு வங்காளம் மற்றும் அசாம் மாநில ரயில்வே தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. இதனைச் சிறப்பாகச் செய்தார். பின்னர் 1948ம் ஆண்டு அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953ம் ஆண்டில் நடந்த பிபிடியுசி சங்க மாநாட்டில் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிஐடியு உருவாக்கப்பட்ட போது அதன் மேற்குவங்க மாநிலத் துணைத்தலைவர்களுள் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அதேவேளையில் அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வானார்.
இதேபோல் வெகுஜன அமைப்புகளான சோவியத் யூனியன் நண்பர்கள் (எப்எஸ்யூ) மற்றும் பாசிசத்திற்கு எதிரான எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றினார்.
மக்கள் பிரதிநிதியாக...1946 ம் ஆண்டு வங்காள சட்டமன்றத்திற்கு ரயில்வே தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிபாசு 1957 ம் ஆண்டு முதல் 1967 ம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
1967 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் அவர் ஐக்கிய முன்னணி சார்பாக மேற்கு வங்க மாநிலத்தின் துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 1967 ல் நிதி மற்றும் போக்குவரத்துத் துறைகளையும், 1969 ல் காவல் துறையை உள்ளடக்கிய உள்துறைப் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.
இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்காங்கிரஸ் கட்சியின் அராஜகச் செயல்களால் 1972 முதல் மேற்குவங்கத்தில் குழப்பம் நிலவியது. இதையடுத்து 1977 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி பெரும் வெற்றி பெற்றது. அப்போது முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசு 2000 ம் ஆண்டு நவம்பர் 3 ம் தேதி வரை அப்பொறுப்பில் இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஜோதிபாசுவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிபாசு தனது நினைவுகளை அரசியல் சுயசரிதையாக எழுதியுள்ளார். மேலும் கட்சிப் பத்திரிகைகளில் அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். வங்கமொழியில் அவர் எழுதிய கட்டுரைகள் மட்டும் இதுவரை 5 பாகங்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.








No comments:
Post a Comment