January 27, 2010

வன்மம் ஆகாது...!


இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 அன்று நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை புதனன்று வெளியானது. ஆரம்பம் முதற்கொண்டே மகிந்தா ராஜபக்ஷே முன்னிலை வகித்தார். இறுதியாக ராஜபக்ஷே 55 லட்சத்து 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 (57.88 சதவீதம்) வாக்குகளும், பொன்சேகா 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 (40.15 சதவீதம்) வாக்குகளும் பெற்றனர்.

இச்செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட பொன்சேகா, "தான் தங்கியிருந்த விடுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர் என்றும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது" என்றும் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் இதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். இந்த மாதிரியான அராஜக செயல்கள் எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் நல்லதல்ல.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த சூழலில் நடக்கும் தேர்தல் இதுவாகும். எனவே இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது.


"உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் யாருக்கு முக்கியப் பங்கு" என்பதே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான அம்சமாக இருந்தது. அதே நேரத்தில் இருதரப்பும் ஆரோக்கியமான பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் கூறமுடியாது. நிலைகுலைந்துள்ள பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை புனரமைப்பது, அவர்களை தங்களது சொந்த இடத்தில் குடியமர்த்துவது போன்ற அம்சங்களில் இரு தரப்புமே கவனம் செலுத்தவில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்குவது என்ற நெடு நாளைய கோரிக்கையை இரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

எனினும் தேர்தலையொட்டி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ராஜபக்ஷே சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொன்சேகாவும் சில வாக்குறுதிகளை வழங்கினார். தமிழர்களின் வாக்கு ராஜபக்ஷேவை விட பொன்சேகாவுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. இதை பழிவாங்கும் எண்ணம் கொண்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதில் ராஜபக்ஷே அரசு இழுத்தடிக்கக்கூடாது. "தமிழ் மக்களும் என் மக்களே" என்று ராஜபக்ஷே அடிக்கடி கூறி வருவதை நடைமுறைப்படுத்த வேண்டும். உள்நாட்டு போரின் காரணமாக நெடுந்துயருக்கு ஆளாகியுள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

போரை காரணம் காட்டி பத்திரிகைச் சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்துள்ளது. இதை சீரமைக்க முன் வர வேண்டும். ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கும் சேர்த்து மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாக தேர்தல் முடிவைக் கருதாமல் தவறைத் திருத்திக் கொண்டு ஆட்சி நடத்த மக்கள் மீண்டும் வழங்கியுள்ள வாய்ப்பு என்று ராஜபக்ஷே கருதுவாரேயானால் இலங்கையின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அது நன்மை அளிக்கும்.

அவ்வாறே ராஜபக்ஷே அரசு செயல்பட அனைத்து தரப்பு மக்களும் வற்புறுத்த வேண்டும்; வலியுறுத்த வேண்டும். அதுவே அந்நாட்டுக்கும், அந்த மக்களுக்கும் நல்லது. வன்மம் கொண்டு அலைந்தால் விரைவில் அதற்கான பலனை சந்தித்தே தீர வேண்டும்.

No comments: