இந்தியாவின் மைய பகுதியாக விளங்குவது மும்பை. வணிக நகரமாகவும் மும்பை திகழ்கிறது.
சில தினங்களுக்கு முன்பு மெகா கிரிக்கெட் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. மும்பை நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் இந்தி நடிகர் ஷாருக் ஹான், "பாகிஸ்தான் வீரர்களை தங்கள் அணியில் சேர்த்து கொள்ள தயார்" என்று கூறியிருந்தார்.
இந்த அறிவிப்புக்கு சிவசேனா எனும் அமைப்பிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எடுப்பார்களா? எடுத்து பார்க்கட்டும், நாங்கள் என்ன செய்வோம் என்று அப்போது தெரியும்" என்று மிரட்டல் தொனியில் செய்தியாளர்கள் மையத்தில் கூக்குரலிட்டது சிவசேனா அமைப்பு.
மேலும், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான "சாம்னா"விலும் பால்தாக்கரே, ஷாருக் ஹானை தாக்கி கடுமையாக எழுதியிருந்தார். போஸ்டர்களை கிழித்தும், ஷாருக் ஹான் நடித்த "மை நேம் ஹான்" என்ற திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தும், மீறி வெளியிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கொக்கரித்து வருகின்றனர்.
இதே சிவசேனா அமைப்பினர், "முதலில் நான் இந்தியன்; அப்புறம்தான் நான் ஒரு மராட்டியன்" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு "சாம்னா" தலையங்கத்தில் கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர். பகிரங்கமாக மிரட்டவும் செய்தனர்.
மும்பையில் தேர்தல் முடிந்து எம்எல்ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட போது, "மராட்டி மொழியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று நவநிர்மாண் அமைப்பு மிரட்டல் விடுத்தது. மீறி பதவிப்பிரமாணம் எடுத்த ஒரு எம்எல்ஏவை கன்னத்தில் அறைந்தனர். எல்லோருக்கும் தாய்மொழி மீது பற்றிருக்கும். அதே நேரத்தில் வெறித்தனமாக செயல்படுவதையும், திணிப்பதையும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்வு எழுத வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தனர்.
ஒரு நாடு அண்டைநாடுடன் சுமுக உறவை வளர்த்துக் கொள்வதன் மூலமே அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். சுமுக உறவுக்கு விளையாட்டுப்போட்டிகள் ஒரு சிறந்த காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை உள்ள ஒரு நாடாகும். இங்கு பல்வேறு மதம், இனம், மொழிகளைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியா தனது கொள்கைக்கும், கோட்பாடுக்கும், மரியாதைக்கும் இழுக்கு ஏற்படாவண்ணம் அண்டை நாட்டுடன் தனது உறவை பலத்த வேண்டும்.அதே நேரத்தில் உள்நாட்டில் சிவசேனா, நவநிர்மாண் போன்ற சுயநல சக்திகளை களைய வேண்டிய பொறுப்பும் உள்ளது.
தொடர்ந்து வரும் இதுபோன்ற உறுமல்கள் பயத்தை ஏற்படுத்துவதைவிட, கவலையையே ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் உறுமல் அடக்கப்பட வேண்டும். இந்தியர்களின் கவலை போக்கப்பட வேண்டும்.
இதுவே தற்போதைய இந்தியாவுக்கும் மிகவும் அவசியமாகும்!



No comments:
Post a Comment