
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 16அன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை, தேனி,திருச்சி, தஞ்சை, சிவகங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
காளைகளை பிடிப்பதற்காக 721 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். ஆனால் 607 பேர் மட்டுமே உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்தனர். இதில் 494 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 113பேர் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடித்தவர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் அலங்காநல்லூரைச் சேர்ந்த செல்வம், சோளங்குருணியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துராமன்(23), பாலமேட்டைச் சேர்ந்த முருகவேல், திருச்சியைச் சேர்ந்த முருகேசன், அலங்காநல்லூர் அருகே உள்ள வலசையைச் சேர்ந்த பழனிமுருகன், பள்ளபட்டியைச் சேர்ந்த மச்சக்காளை மகன் ஆசை ஆகியோர் படுகாயமடைந்து முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் சோளங்குருணியைச் சேர்ந்த முத்துராமன் என்ற மாடுபிடி வீரரை மாடு இடதுகழுத்தில் குத்தி தூக்கி வீசியது. இதில் அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் குழு ஒரு மணி நேரம் போராடியது. முத்துராமனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அலங்காநல்லூரைச் சேர்ந்த செல்வம் என்பவரை மாடு முட்டியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தூக்கி வரப்பட்ட அவருக்கு அலங்காநல்லூர் ஆரம்ப சுகா தார நிலையத்தில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர். ஆக்சிஜன் ஏற்றப்பட்ட நிலையில் அவர் உட னடியாக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் பொதுமக்கள் மீது கல்லெறிந்த சம்பவமும் நடைபெற்றது. இதில் மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு வாங்கி வரச்சென்ற அலங்காநல்லூர் மருத்துவமனை வேன் ஓட்டுனருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனபாண்டியன் என்ற காவலருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மு.க. அழகிரி துவக்கிவைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், அலங்காநல்லூர் முன்னாள் பேரூராட்சித்தலைவர் த.ரகுபதி உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாடு பிடித்த வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, டிவி, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், கட்டில் போன்றவை பரிசாக அளிக்கப்பட்டன.

No comments:
Post a Comment