January 15, 2010

108 வருடங்களுக்கு பின் வளைய கிரகணம்



சென்னை மற்றும் உலகம் முழுவதும் நீண்ட நேரம் நீடித்த அரிய கங்கண சூரிய கிரகணம் வெள்ளிக்கிழமை நடந்தது. முழுமையான சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், மாணவர்கள் உள்பட 1000 பேர் கன்னியாகுமரியில் குவிந்தனர். சென்னையில் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது.
சந்திரன் புவியை நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. இதனால் புவிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 4 லட்சம் கி.மீ. வரை மாறுபடுகிறது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம் (வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின் போது வெளியே தெரியும். எனவே, இதனை கங்கண சூரியகிரகணம் என்கிறோம். அதுபோன்ற ஒரு கங்கண சூரியகிரகணம், 108 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.
இந்திய நேரப்படி காலை 10.44 மணிக்கு மத்திய ஆப்ரிக்காவில் துவங்கி 2.29 மணிக்கு சீனாவில் முடிவடைந்தது. அதிகபட்ச சூரிய கிரகணம் உலகெங்கும் 12.36 மணிக்கு நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், மதுரை, இராஜபாளையம், பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கிரகணம் தெரிந்தது.
சென்னையில் 82.33 சதவீதம் வரை சூரியனை சந்திரன் மறைத்தது. சென்னையில் கிரகணம் 11.30 மணிக்கு துவங்கி 3.05 மணி வரை நீடித்தது. அதிகபட்ச கிரகணம் பகல் 1.08 முதல் 1.15 மணிக்குள் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கிரகணத்தைப் பார்க்க பிர்லா கோளரங் களத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்களும் மாணவர்களும் நீண்ட வரிசையில் நின்று கிரகணத்தை பார்த்தனர். கன்னியாகுமரியில் காலை 11.06க்கு துவங்கி மாலை 3.05 மணி வரை நீடித்தது. இதில் முழு கங்கண சூரிய கிரகணம் பகல் 1.10 முதல் துவங்கி அதிகபட்சம் 9 நிமி டம் 58 வினாடி வரை நீடித் ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு நேரம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித் தனர். இந்த கிரகணத்தை காண நாடு முழுவதும் இருந்து அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்லூரி மாண வர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர்.
இதற்கு முன்பு 1901 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நடந்த கங்கண சூரியகிரக ணத்தை தமிழகத்தில் பார்க்க முடிந்தது. 108 ஆண்டுகளுக் குப் பிறகு வெள்ளியன்று கங்கண சூரியகிரகணம் தெரிந்தது. மீண்டும் 2019ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி தமிழகத்தில் தெரியும். அப்போது இதுபோன்ற கங் கண சூரியகிரகணத்தை காண இயலும்.
நூறு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட வளையல் (கங்கணம்) சூரிய கிரகணம் வெள்ளியன்று வலம் வந்தது. நிலவின் முழு நிழல் சூரியனை முழுமையாக மூடிய போது சூரியனின் ட்ட விளிம்பு மட்டுமே வளையல் போல வானில் ஜொலித்தது.
இந்த அற்புதமான கிரகண நிகழ்வு இராமேஸ்வரத்தில் மிகத்தெளிவாக தெரிந்தது. இந்த வளையல் சூரிய கிரகணத்தின் மையப் பாதை பாம்பன் தீவான தனுஷ்கோடியில் உள்ள ராமர்கோவிலை ஒட்டிச் சென்றது. இது மையப்பாதையில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இராமேஸ்வரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இருந்தது.
இராமேஸ்வரம் கடலோரப்பகுதியில் வானில் வலம் வரும் விந்தையான வளையல் கிரகணத்தை பார்க்க விஞ்ஞானிகள், கிரகண ஆய்வாளர்கள், பொதுமக்கள் எனப் பல்லாயிரம் பேர் குவிந்திருந்தனர். இந்த வளையல் சூரிய கிரகணம் 11 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் காலை 11 மணிக்கு கேரளாவில் துவங்கியது. மாலை 3.15 மணிக்கு மிசோரமில் முடிவடைந்தது. கேரளாவின் தெற்கு பகுதியிலும், தமிழகத்திலும் வளையல் சூரிய கிரகணத்தின் அற்புதக் காட்சிகளை வானில் ரசிக்க முடிந்தது.
இராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி, இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணத்தை காண சிறந்த இடமாக அமைந்தது. ஒரே நேர்கோட்டில் சூரியன்-சந்திரன்- பூமியை நோக்கிய நிலையில் இந்த வளையல் கிரகணத்தை தனுஷ்கோடி, கன்னியாகுமரி, வர்கலா பகுதி மக்கள் மிகத்தெளிவாக பார்த்து ரசித்தனர்.
வளையல் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக 2260 கி.மீ. தொலைவில் உள்ள கொல்கத்தாவில் இருந்து தனுஷ்கோடி வந்த பரேஷ் சன்யால் என்பவர் கூறுகையில், பல சூரிய கிரகணங்களை பார்த்திருக்கிறேன். முதல்முறையாக இந்த கிரகணத்தில் ஒளிப்பிழம்பாய் ஜொலிக்கும் சூரிய வளையத்தைப் பார்க்கிறேன் என, கண்களில் ஆச்சரியம் விலகாமல் தெரிவித்தார்.
9 ராக்கெட்டுகள்
வளையல் சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு முன்பாகவும், ஏற்பட்ட பின்னரும் விண்வெளியில் காணப்படும் மாறுபாடுகளை கண்டறிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டது. இதன்படி இஸ்ரோ, மெல்லிய ஓசை எழுப்பக்கூடிய 9 ராக்கெட்டுகளை கிரகணத்திற்கு முன்பாகவும், கிரகணத்திற்கு பின்னரும் ஏவியது. இந்த ராக்கெட்டுகள் மூலம், சேகரிக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி சூரியக் கதிர்வீச்சு வேகத்தை உடனடியாக குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். வளையல் சூரிய கிரகணம் மதிய நேரத்திலேயே ஏபட்டது. அப்போது சூரியக் கதிர்வீச்சு உச்ச கட்ட நிலையில் இருந்தது. மேலும் இக்கிரகணம் நீண்ட நேரம் நீடித்தது. எனவே இந்த இரு அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி சூரியக்கதிர் வீச்சின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
தில்லியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.













No comments: