March 09, 2010

சரித்திரத்தின் வாசல் திறந்தது

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கழித்து பல்வேறு போராட்டங்கள், வற்புறுத்தல்கள் என்று கடந்த பின் 2010 மார்ச் 9ம்தேதி மாலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக உள்ள பெண்களின் ஜனநாயகம், சுதந்திரம் என்று பல்வேறு மேடைகளிலும், பத்திரிகைகளிலும் பேசப்பட்ட வந்த போதிலும் அவர்களுக்கான ஒதுக்கீடு என்பது நீண்ட போராட்டமாக இருந்து வந்தது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மகளிர் மசோதா இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி உலக மகளிர் தினமான மார்ச் 8அன்று விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. கடும் எதிர்ப்புகளும், அமளிகளும், ஒத்திவைப்புகளையும் சந்தித்து வந்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 9ம்தேதி செவ்வாயன்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூட்டம், சந்திப்புகள் என்று நடைபெற்ற பின் காலை நடைபெற்ற கூட்டத் தொடரிலும் கடும் அமளியே நிலவியது.
இந்த நிலையில் ஐமுகூட்டணியில் மம்தா பானர்ஜி திடீர் பல்டியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பரபரப்புடன் கூடிய நாடாளுமன்றத்தில் மாலை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 186 உறுப்பினர்களின் ஆதரவோடும், மம்தாவின் எதிர்ப்பு காரணமாக 1 ஓட்டு எதிர்ப்போடும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த முதல் நிலையை தாண்டியுள்ளது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா ஒரு புதிய சரித்திரத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது.
இதே சூட்டோடு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு மக்களவையில் நாளை நிறைவேற வேண்டும் என்பதே ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆவலும், எண்ணமும்....


மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா
இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேறியது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென  பல்வேறு பெண்கள் அமைப்புகளும், கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தன. வாய்ப்புகள் பல கிடைத்தும், சமாஜ்வாதி, ஆர்ஜேடி போன்ற கட்சிகளின் எதிர்ப்பினை காரணம் காட்டி இம்மசோதாவை காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசுகள் இழுத்தடித்து வந்தன.
இந்தப் பின்னணியில், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி மார்ச் 8ம்தேதி திங்களன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை  நிறைவேற்ற தீர்மானித்தது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும், பாஜக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து, அதை இழுத்தடிக்கும் விதமாக முலாயம் சிங்கின் சமாஜ்வாதிகட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர்  சரத் யாதவ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், திங்களன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் “அரசமைப்பு சட்ட (108வது திருத்த) மசோதா”வை தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி, ஆர்ஜேடி மற்றும் ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள் வரலாறு காணாத அராஜக அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் ஹமீது அன் சாரியின் கையிலிருந்த மசோதா ஆவணங்களை பறித்துக் கிழித்து எறிந்தனர். இத்தகைய அமளி மக்களவையிலும் ஏற்பட்டது. இதனால் இரு அவை களும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தச்சூழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை சமாஜ்வாதிகட்சியும் ஆர்ஜேடியும் வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்தன. இரு கட்சிகளும் வாபஸ் பெற்றாலும் கூட, அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது  என்று தெரிந்தும், நிலைமையை எதிர்கொள்ள திணறிய காங்கிரஸ் மேலிடம், திட்டமிட்டபடி திங்களன்று மாலை மாநிலங்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்தி வைக்கும் யோசனையையே தேர்வு செய்தது.
இதனால் மகளிர் மசோதா நிறைவேறும் என்று எதிர் பார்த்திருந்த மகளிர் அமைப்பு கள் ஏமாற்றமடைந்தன.
அனைத்துக்கட்சி கூட்டம்
இந்தப்பின்னணியில், செவ்வாயன்று காலை அரசு, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. மக்களவையின் அவைத்தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ராஜா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, அஇஅதிமுக மாநிலங்களவை தலைவர் டாக்டர் வி.மைத்ரேயன், பாஜக மாநிலங்களவை துணைத்தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் வலியுறுத்தின.
மீண்டும் ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து மாநிலங்களவை கூடியது. உடனே சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி உறுப்பினர்கள் அமளியை துவக்கினர். மீண்டும் மீண்டும் மூன்று முறை அவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை, அவைத்தலைவர் ஹமீது அன்சாரிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், திங்களன்று அவையில் அவைத்தலைவரை தாக்க முயற்சித்ததோடு ஆவணங்களை கிழித்தெறிந்து அநாகரிகமாக நடந்து கொண்ட ஏழு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அன்சாரி முன்மொழிந்தார். அப்போதும் மிகப்பெரும் அமளி ஏற்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 உறுப்பினர்கள் மாலை 3 மணி வரையிலும் அவையிலிருந்து வெளியேறாமல் பிடிவாதமாக அமளியில் ஈடுபட்டவண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் அவைத்தலைவரின் உத்தரவின்பேரில் அவைக்காவலர் களால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
இதன்பின்னர், மசோதா மீது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
விவாதம்-வாக்கெடுப்பு
மாலை மீண்டும் கூடிய அவையில் விவாதம் நடைபெற் றது. விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட் டோர், மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த வரலாற்று வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் வற்புறுத்தி பேசினர்.
இதைத்தொடர்ந்து மாலை சுமார் 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும் எதிராக 1 உறுப்பினரும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அவைத்தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.
மம்தா திடீர் பல்டி
மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரித்து வாக்களித்த நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் திடீரென்று பல்டி அடித்தது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிர்மூலமாக்க அரசு சதி செய்வதாகக் குற்றம்சாட்டிய அவர், அதனால் வாக்கெடுப்பில் திரிணாமுல் கட்சி கலந்து கொள்ளாது என்று திடீரென்று அறிவித்தார். மாநிலங்களவையில் மம்தா கட்சிக்கு இரண்டு உறுப் பினர்கள் உள்ளனர்.  காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்தபோதிலும், மம்தா, மசோதாவுக்கு எதிராகவே செயல்பட்டார். மாநிலங்களவையில் நடைபெற்ற  வாக் கெடுப்பின்போது அக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும்  அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
முன்னதாக, தங்களது கட்சி தலைவியின் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் தலைமைக்கொறடாவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் சருமான தினேஷ் திதிவேதி, மகளிர் மசோதாவை வலுக் கட்டாயமாக நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று கூறினார். மசோ தாவை நிறைவேற்றுவதில் இடதுசாரிகள் மற்றும் பாஜகவின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு அரசு செயல்படுவதால் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.

மாநில ஓட்டு நடந்த விபரம்:
  • மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள்: 245
  • வாக்குரிமை பெற்ற உறுப்பினர்கள்: 233
  • மசோதா நிறைவேற தேவை: 155
  • மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள்: 186
  • எதிர்ப்பு வாக்கு: 1
  • 2 உறுப்பினர் கொண்ட மம்தா கட்சி கடைசி நேரத்தில் திடீர் பல்டி.
  • 15 உறுப்பினர் கொண்ட  பகுஜன் சமாஜ் கட்சி வெளிநடப்பு
  • சரத்யாதவின் எதிர்ப்பையும் மீறி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள 7 உறுப்பினர்களும் ஆதரவு

1 comment:

Subu said...

இந்த மசோதாவை அரசு முண்டி அடித்துக்கொண்டு கொண்டு வர உண்மையான காரணம் என்ன ?

ஒரு ஓட்டெடுப்பு

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html