March 03, 2010

நம்பிக்கையை மூலதனமாக்கும் கும்பல்...!

இறை நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ள மக்களின் பெரும்பாலானவர்களின் மனதில் விரவி கிடக்கும் ஒன்று.
குடும்பம், உறவு, பணம், ஆடம்பரம், ஆசை, பாசம் இவற்றை புறந்தள்ளிவிட்டு தனியே ஒதுங்கிவிடுவதையே துறவறம் என்கிறார்கள்.
நாங்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது. கடவுள்... கடவுளின் சீடர்கள்... மக்களின் குறைகளை களைய வந்த சீலர்கள்... அசாத்திய சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் காவி உடை அணிந்த சிலர் கூறுகிறார்கள்.
எங்கள் எண்ணமெல்லாம் இறைவனை மட்டுமே சூழ்ந்துள்ளது. செயலும் அப்படியே அமைந்துள்ளது... என்றும் கூறுகிறார்கள்.
இப்படியெல்லாம் கூறி வலம் வந்த பிரேமானந்தா, அர்ச்சகர் தேவநாதன் உள்ளிட்டோரின் வரிசையில் தற்போது வீடியோ ஆதாரங்களுடன் சிக்கியுள்ளார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவும், தமிழ் நடிகையும் ஒன்றாக இருந்த வீடியோ ஆதாரத்தை 'சன் நியூஸ்' தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சாமியாரின் இந்த செயல் ஒட்டுமொத்த மக்களையும், குறிப்பாக இறை நம்பிக்கையுள்ள மக்களின் பெரிதும் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ளது.
ஒவ்வொரு மக்களும் தங்களின் மன நிம்மதிக்காகவும், ஏதாவதொரு வகையில் பெறும் ஆறுதலுக்காகவும் இந்த மாதிரி சாமியார்களிடமோ, ஜோதிடர்களிடமோ செல்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி பணம் பறிக்கும் ஒரு கூட்டமாகவும், மூலதனத்தை பெருக்குவதாகவும் செய்து வருகிறார்கள் இந்த சாமியார்கள்; ஜோதிடர்கள்.
மடங்கள் என்ற பெயரிலும், ஆசிரமங்கள் என்ற பெயரிலும், தோட்டங்கள் என பல்வேறு வகையில் சொத்துக்கள் இல்லாமல் யாரும் இல்லை என்பதையும் நாம் மனதில் நிறுத்துவோம்.
இப்படிப்பட்ட போலிகளின் உண்மை முகத்தை கிழித்து வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டுமென்ற அதே நேரத்தில், சிக்கியவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.
அதே சூழலில் எந்த மனிதனும் அவதாரங்கள் கிடையாது; முன்கூட்டியே எதையும் கணிக்கும் சக்தி மனிதர்களுக்கு கிடையாது என்பதையும் நாமும் உணர வேண்டும். இதுபோன்று சொல்லி திரிபவர்களிடம் நாம் ஏன் போய் ஏமாற வேண்டும்?
இப்படி நான் எழுவதால் நம்பிக்கையை கொச்சை படுத்தவில்லை.... நல்ல மனம், நல்ல எண்ணம் இதுவே கடவுள்.... இதையே நேசிப்போம்... வணங்குவோம்...!

No comments: