ஒவ்வொரு நாளும் 9.30 மணியளவில் 'பங்கு வர்த்தகம்' குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேரடியாக நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. பிப்ரவரி 27ம்தேதியன்று "பட்ஜெட்டிற்கு பிந்தைய வேலைவாய்ப்பு" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலாஜி என்பவர் நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஏகப்பட்ட கேள்விகள் வந்தன. இதனால் மேலும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற ஆதங்கமும் ஒவ்வொருவரின் கேள்வியிலும் வெளிப்பட்டது.
"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது; மானியத்தால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு நாடும் மானியத்தை வெட்டி வருகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்ற வரி விதிப்புகள் அவசியம் தேவை. உள்கட்டமைப்பு ஒதுக்கப்பட்ட நிதியால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்" என்று பல்வேறு விதமான கேள்விகளின் போது தெறித்த அவரது பதில்களின் சாராம்சமாக இருந்தது.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மானியம் வழங்குகின்றன. ஏனென்றால் இது யாரோ ஒரு சிலரின் பாதிப்புக்குரியது அல்ல; ஒட்டுமொத்த மக்களையும், மக்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடியது.
ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அவர்களை மேலும் படுகுழியில் தள்ளுவதாகாதா? யாருக்காக இந்த அரசு உள்ளது. ஏழை - எளிய மக்களை காக்க முடியாது என்றால் எதற்கு இந்த அரசு....? மக்களை காக்க வேண்டிய கடமை உள்ளதா? இல்லையா?
ஆனால், நட்சத்திர ஓட்டல்கள் தொடங்கினால் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.வி., செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது இந்த அரசு. டி.வி.யும், செல்போனையும் உண்டு வாழ முடியுமா இந்த நாட்டு மக்களால்?
தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் மூலம் அளிக்கப்படும் வேலைவாய்ப்பு ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. அதுவும் சீராக நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்கது. ஆண்டுக்கு 100 நாள் வேலை பார்த்தால் ஒவ்வொருவரின் வயிறும் நிறைந்துவிடுமா? ஏன் இதையெல்லாம் உணர மறுக்கிறீர்கள்....?
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியாலும், கடுமையான வெள்ளத்தாலும் நெற்பயிர்கள் அழிந்து போய்விட்ட நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் விவசாயியிடம், காலத்தில் கடனை செலுத்தினால் 1 சதம் வட்டி என்று பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கிறார்கள். வாழ்வா? சாவா என்ற நிலையில் நிற்பவர்களிடம் எப்படி இப்படி கேட்க தோன்றுகிறது?
கடனை வாங்கி, வாழ்வை இழந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகளை, விவசாயத்தை காக்காமல் நீங்கள் என்ன பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தப் போகிறீர்கள்...?
உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியால் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வரை கிடைக்கும் என்று நீங்கள் (பாலாஜி) கூறுகிறீர்கள்.... 5 ஆயிரம் வேலைவாய்ப்பு எந்த மூலைக்கு? கட்டிடத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறுகிறீர்கள்... இந்த விலையேற்றத்தால் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழப்பார்களே இதை என்னவென்று சொல்வது?
"பங்கு வர்த்தகம்" குறித்த நிகழ்ச்சியில் பங்கு வர்த்தக தகவலை மட்டும் கூறி விட்டு செல்லுங்கள்... பட்ஜெட்டுக்கு ஆதரவாக பேசி எங்கள் மனங்களை நோகடிக்காதீர்கள்...! இதை சன் நியூஸ் தொலைக்காட்சியும், சிறப்பு விருந்தினரும் கவனித்தால் நன்று...!
1 comment:
very good
Post a Comment