சிற்பக்கலைநகரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தொடர்பாக வெளியிட்ட அரசு ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் யானைமலையில் சிற்பக்கலைநகரம் அமைப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய ஒன்பதுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அரசாணை (237) வெளியிடப்பட்டிருந்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு யானைமலையைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சிற்பக்கலைநகரம் அமைந்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டியிருக்கும், விவசாய நிலங்கள் பறிபோகும், அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தோடு கலங்கி நிற்கின்றனர்.
கலைநகரம் என்ற பெயரில் மக்களை குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றக்கூடாது. வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக்கூடாது. இவ்விஷயத்தில் தமிழக அரசு தனது உண்மை நிலையை தெளிவுபடுத்தவேண்டுமென அனைத்து தமிழக அரசை வலியுறுத்தியது. மக்களை திரட்டி இயக்கங்களும் நடத்தின. கிராமமக்களும் தன்னெழுச்சியாக சாலைமறியல் போராட்டம், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவது, துண்டுபிரசுரங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தினர்.
சோகோ அறக்கட்டளை நிர்வாகி மகபூப்பாட்சா, சிற்பக்கலைநகரம் அமைப்பதற்கு தடை விதிக்கவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானைமலையிலிருந்து சிறுகல்லைக்கூட வெட்டியெடுக்கக்கூடாது எனக்கூறி, இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகள், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்டநிர்வாகம் விளக்கம்
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு)தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதுரை மாவட்டம், மதுரை வடக்குவட்டம், ஒத்தக்கடை ஒற்றைப்பாறையினைக் குடைந்து சிற்பநகர் உருவாக்க ஆய்வுக்குழு அமைத்து அரசு ஆணை எண்227, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை, நாள் 30.12.2009ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒத்தக்கடை யானைமலையினை சிற்பநகரமாக உருவாக்கிட ஒத்தக்கடை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே கிராமப் பொதுமக்கள் நலன் கருதி, மேற்குறிப்பிட்ட அரசு ஆணையினை ரத்து செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி முழு விபரங்களுக்கு...
http://tamizhexpress.blogspot.com/2010/02/blog-post_19.html

No comments:
Post a Comment