
"ஐயையோ, தேர்தல் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருச்சே" என்று அம் மக்களே கவலைப்பட்ட காலம் அது.
பாக்கெட்டில் பைசா இல்லையா, 'கட்சிப் பந்தல்ல போயி வாங்கிட்டு வா!' என்று சொல்லி வாங்கும் அளவுக்கு வசதியாகத் திறந்தவெளி ஏ.டி.எம். சென்டர்களாக எலெக்ஷன் பூத்துகள் இருந்தன. ஜனநாயக நெறிமுறைகள் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நடந்து முடிந்தது திருமங்கலம் இடைத் தேர்தல்.
இப்போதும் ஒரு தொகுதியில் இப்படித்தான் அண்ணன்தான் வேட்பாளர் என்று முடிவானதும் அநேகமாக தமிழ்நாட்டின் முக்கியத் தொழிலதிபர்கள், அதிகார மையங்கள் அனைத்தும் தகவல் தரப்பட்டது. 'தேர்தல் செலவுக்கு அண்ணன் பணம் கேட்டாரு'. இதற்காக, சென்னையில் கடலோரப் பகுதி வீட்டிலும், பரப்பரப்பான பகுதி ஹோட்டல் ஒன்றிலும் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்தில் 50 சியைத் தாண்டியதாம் வசூல். இதை எப்படிக் கொணடு போவது?
வேட்பாளருக்கு நெருக்கமானவர் ஐடியா கொடுத்தார். 'பஸ்ல கொண்டு போயிடலாம்.' பயணிகள் இல்லாத ஆம்னி பஸ்களில் இந்தப்பெட்டிகள் ஏற்றப்பட்டன. ஆனால், பாதுகாவலர்கள் மட்டும் இருந்தார்கள். பகலில் இந்த பஸ்கள் பயணமாகின. நகரின் மைப் பகுதியான கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டன. சில பெட்டிகள் மட்டும் ஒரு வீட்டிக்குள் பதுக்கப்பட்டன. அந்த வீட்டின் எந்த அறையைத் திறந்தாலும் பணப்பெட்டிதான் என்ற சொல்லும் அளவுக்கு கரன்சி குவியல்கள் இருப்பதாக ஊருக்குள் வதந்தி. மொத்தமுள்ள வாக்காளர்களுக்கும் தலைக்கு 500 போட்டால் எவ்வளவு பரும், 1500 போட்டால் எவ்வளவு தேவை என்று கணக்கு போட்டுப் பார்க்கிறார் அண்ணன். அவருக்கே தொகை கண்ணைக் கட்டுகிறது. 'முதல்ல 500 போடுங்க' என்று உத்தரவு போடுகிறார். இரண்டு தெருக்களில் பட்டுவாடா ஆரம்பமாகிறது. ஆனால், கவரை வாங்கியவர்களுக்குச் சந்தோஷம் இல்லை. உதட்டைப் பிதுக்கியவர்கள், 'இவ்ளோதானா?' என்று சுருதி இறங்கியதாக அண்ணனுக்குத் தகவல் வந்தது. 'கொஞ்சம் பிரச்சாரம் போயிட்டு அப்புறமாக் குடுக்கலாம்" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்க ஆரம்பித்தார்.

"ஏன் பாட்டி! என்னைத் தெரியுதா?" என்று கேட்கிறார் அதிகார மையமான அந்த வேட்பாளர் தெரியும் என்கிறார் பாட்டி. "அப்படின்னா எனக்குத்தான ஓட்டு போடுவீங்க" என்று மறுபடியும் கேட்கிறார். 'ஆமாம்' என்று பாட்டி தiயை ஆட்டியதும் நகர்கிறது வேட்பாளரது வாகனம். உடனே அந்தப் பாட்டி "ஏதோ 5,000 ரூபாய் தருவீங்கன்னு சொன்னார்களே?" என்றதும் அடியாட்கள் அந்தப் பாட்டியை அலேக்காக அள்ளிக் கொண்டு போனார்கள். "நாங்கதான் தருவோம்ல.... அதுக்காக அண்ணன் கிட்டயா கேக்குறது?" என்று செல்லமாகச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். எப்ப வருமோ, எப்ப வருமோ என்று காத்துக்கிடக்கிறார் பாட்டி.
பகுதிச் செயலாளரைப் பார்க்க ஓர் ஆள் அதிகாலையில் வந்திருக்கிறார். என்ன என்று அவர் கேட்பதற்கு முன்பே மஞ்சள் பைக்குள் இருந்து வெளியில் வந்தது ரேசன் கார்டு. 'இந்தாங்கண்ணே.. ஒரு கார்டுக்கு 7,000 தர்றீங்களாமே?" என்கிறார். 'அட்ரஸை மட்டும் குடுத்துட்டுப் போப்பா. வீடுதேடி வரும்!" என்று பக்குவமாக அனுப்பி வைக்கிறார் பகுதிச் செயலாளர்.
இன்னோர் இடத்தில் வாக்கு கேட்டு வாகனம் வருகிறது. வயதான முதியவர், வேட்பாளருக்கு அருகில் வருகிறார். "ஐயா, எங்க சொந்தக்காரங்க எல்லாம் திருமங்கலத்துல குடிசையை மாத்திட்டு ஓட்டு வீடு போட்டுட்டாங்க. நான் இனி குடிசையில இருந்தாக் கேவலம். எனக்கும் வழி பண்ணுங்க" என்கிறார். இதைக் கேட்ட அண்ணன், அருகில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுக்கறிhர். முதியவரைத்தனியே அழைத்துச் சென்று ஏதோ சொல்கிறார். அநேகமாக அவருக்கான நம்பிக்கை வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
"உங்களுக்கு டி.வி. எல்லாம் கிடைச்சுதா?" என்று கேட்கிறார் வேட்பாளர். 'இல்லை' என்று கூட்டம் தலையை ஆட்டுகிறது. 'அவங்களைக் கூட்டிட்டுப் போயி காட்டுங்க' என்று கோபமாகச் சொல்கிறார். ஊர் முக்கியஸ்தர் வீட்டுக் கதவு திறக்கப்படுகிறது. அங்கு டி.வி.க்கள் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 'இதெல்லாமே உங்களுக்குத்தான், தேர்தல் நேரம்கிறதுனால கொடுக்க முடியாது. தேர்தல் முடிஞ்சதும் வீடு தேடி வரும்" என்று ஆசை வார்த்தை சொல்லப்படுகிறது. 5,000 பணம் கிடைக்கும், வீட்டுக்குத் தேவையான டி.வி. கிடைக்கும். கேஸ் ஸ்டவ் வரும் என்று நம்பிக்கையுடன் மக்கள் வாசலைத் திறந்துவைத்துக் காத்திருக்கிறார்கள்.
தூங்காமல் இருக்கிறார் வேட்பாளர். ஏன்தான் வேட்பாளரானோமோ என்ற வருத்தம் அவரை வாட்டாமல் இல்லை. நித்தமும் யார் யாரோ வந்து, 'அந்தப் பகுதி பரவாயில்லைண்ணே. இந்த ஏரியாதான் வீக்கா இருக்கு' என்று தன்னிடம் தலைசொரிந்து நிற்பiப் பார்க்க அவருக்குச் சகிக்கவில்லை. ஆனால், ஜெயித்தாக வேண்டும். எனவே, தொகுதியை நகர், புறநகர் என்று இரண்டாகப் பிரித்தார். இரண்டு பேர் வசம் இது ஒப்படைக்கப்பட்டது. நித்தமும் காலையில் இவர்கள் அண்ணன் முன் ஆஜராகிறார்கள். நல்லது கெட்டதுகளைப் பேசிவிட்டுக் கலைகிறார்கள். இவர்கள் வம்புதும்பு, அடிதடி, பட்டுவாடாக்களில் தலையிடக் கூடாது. அதாவது "டீசன்ட்டான கைகள்". இவர்களுக்குக் கீழே நகர், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருக்கும் பகுதிச் செயலாளர்கள் போக, தேர்தல் வேலைகளைக் கவனிக்க எக்ஸ்ட்ரா ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர் 72 சிறு பகுதிகளாகவும், புறநகர் 300 கிளைக் கழகங்களாகவும் இருக்கிறது. பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். பூத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பூத்துக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை தினசரிச் செலவு. கொடி, தோரணம் கட்டுவது, நோட்டீஸ் போடுவது போக, அங்கு வந்து போகும் ஆட்களுக்கான செலவுக்கு இது தரப்படுகிறது. பூத் பொறுப்பாளர்கள் தினமும் 1,000 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தினம் அண்ணன் அந்த பூத் உள்ள தெருவுக்கு ஓட்டு கேட்க வருகிறார் என்றால், கூடுதல் பணம் வந்து சேரும். பிரியாணிப் பொட்டலங்கள் மலையளவு குவியும். அண்ணன் வரும்போது, ஆரத்தித் தட்டு காட்டுவதற்காக முன்னமே பெண்கள்ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு 200 ரூபாய். விளக்குகளைக் கொண்டு வந்து வரவேற்பு கொடுத்தால், அதற்கும் தனி காசு. மாலைகள், சால்வைகள் அணிவிக்க அனுமதிப்பதில்லை. அண்ணன் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் வந்து, ஆரத்தி,குத்து விளக்குகளை செக் பண்ணுகிறது ஒரு க்ரூப். கட்சிக்காரர்களுக்குத் தெரியாத குடும்பமாக இருந்தால் நீக்கிவிடுகிறார்கள். கும்ப வரவேற்பு இந்தத் தேர்தலில் முக்கியமான ஹைலைட். அதாவது ஒருவர் வீட்டில் இருந்து பித்தளை அல்லது சில்வர் செம்பு கொண்டு வந்துவிட வேண்டும் அதற்கு முந்தைய நாள் இரவு ஊருக்குள் ஒரு மினி வேன் வரும். அதில் தேங்காய்கள் இருக்கும். அவை வீடு வீடாகக் கொடுக்கப்படும். அத்துடன் நூறு ரூபாய் பணமும், செம்பைக் கழுவி எடுதது வந்தால் போதும். இதற்கு நான் நீ என்று பெண்களிடம் போட்டி.
'இங்க நான் வர்றதுக்கு முன்னால் எப்படி இருந்துச்சு?' இப்ப எப்படி இருக்கு?' என்று மறுநாள் காலையில அண்ணன் கேட்பார். 'அந்தத் தெரு மட்டும் இன்னும் கொஞ்சம் வீக்கா இருக்கு' என்று பதில் வந்தால், அந்தப் பகுதி ஆட்களுக்கு அதிகமாகப் பாய்கிறது பணம். 'அங்க சரியில்ல.. இங்க சரியில்லன்னு என்னிட்ட யாரும் வந்து சொல்லக் கூடாது. என்ன செய்யணுமோ செய்வோம். ஓட்டு வரணும். அவ்வளவுதான்' என்று தீர்க்கமாகத் தனது கருத்தைச் சொல்லி விட்டு வாக்கு சேகரிக்கக் கிளம்புகிறார். வீக்கான பகுதியின் பொறுப்பாளர்களுக்குக் கேட்கும் தொகைக்கும் கூடுதலாகப்பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.
மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருபவர் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துப் புறப்படத் தயாhகும் போது, தொழிலதிபர்கள் காத்திருக்கிறார்கள். தினமும் மதிய நேரம் அவர்களுக்கானது. நிதி வசூல் பொறுப்பானவர் 'பக்தியுடன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்கள் என லிஸ்ட் வைத்துக் கொண்டு இவர் போன் செய்கிறார். தெரியாத நம்பர் என்று யாராவது எடுக்காமல் போனால், உயர் பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரியிடம் நம்பரைக் கொடுத்து 'ஆணையிடச் சொல்கிறார். 'மத்தியானம் மூணு மணிக்கு அண்ணனைப் பார்க்க உங்களுக்கு அப்பாயின்ட்மெனட். எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்துடுங்க" என்கிறார்கள். பெட்டிகள் படபடக்கின்றன. 'தேர்தல் செலவுக்காக' என்று கொடுக்கப்பட்டு, மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்துவிட்டுக் கிளம்புகிறார்கள். ஒரு நாளைக்கு '2 சி' தேறுகிறதாம்.

எதிரணியைக் கவனிக்க இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எல்லாப் பகுதிச் செயலாளர்களும் தங்கள்பகுதியில் எதிரணிக்காக ஓடியாடி உழைக்கும் ஆட்களின் பட்டியலையும் செல்போன் நம்பரையும் வாங்கி இவர்கள் இருவரிடமும் கொடுக்க வேண்டும். பேரும் நம்பரும் கிடைத்ததும் கைத்தடிகள் இருவரும் போன் செய்வார்கள். இன்னார் பேசுறேன் என்றதும் அலறக் கூடிய அளவு பிரபலம் அவர்கள். 'வளர வேண்டிய வயசுல நீங்க ஏன் அந்தக் கட்சியில உழைக்கிறீங்க? இந்தப் பக்கமா வந்திருங்க' என்று அன்பால் அட்டாக் பண்ணுவார்கள். 'உங்களுக்கு 500 ஓட்டு விழுமாமே? அதுக்கு ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு இந்தப் பக்கமா வந்திருக்க' என்பார்கள். கோபமாகவோ, நடுங்கியோ எதிர்ப்பக்கம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து இவர்களது அடுத்தகட்ட ரியாக்ஷன் இருக்கும். சம்பந்தப்பட்ட செல்வாக்கு நபர் மீது ஏதாவது ஸ்டேஷனில் புகார் இருக்கிறதா என்று பார்க்க ஒருடீம் இருக்கிறது. அடுத்தசில நாட்களில் அவரைத்தஙகம் பக்கம் இழுக்கிறார்களோ இல்லையோ, அவரது உற்சாகத்தை இந்த இருவர் அணி நொறுக்கி விடுகிறது. அப்படி மீறியும் எதிரணிக்கு வேலை பார்த்ததால் ஒரு தலை உருண்டது.
'5,000 கொடுப் போறாங்க. ரேசன் கார்டுக்கு 10,000 கொடுக்கப் போறாங்க, என்று கிளம்பிய வதந்திகளை மக்கள் நம்பிவிட்டார்கள். அண்ணன் கொடுப்பதை உள்ளூர் அசாமிகள் அமுக்கிவிடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். எனவே, ரொம்ப வீக்கான இடங்களுக்கு இரண்டாயிரமும், மற்ற இடத்துக்கு ஆயிரமுமாகக் கவர் போடுகிறார்கள். ஊருக்குள் ஏதாவது விஷேச தினம் வந்தால், அன்று அமைதியாக சப்ளை பண்ணுவதற்காக பிரித்துத் தரப்பட்டுவிட்டது. 100 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் கவர்கள் பிரித்துத் தந்திருக்கிறார்கள். தங்கள் பூத் செலவுக்கான தொகையாக இதை வாங்கிக் கொள்கிறார்கள். இப்படி கவர் போடப்பட்ட பணம் மட்டும் 50 சியைத் தாண்டுமாம்.
சில வீடுகளுக்கு மட்டும் சிலிப் தரப்பட்டுள்ளது. சிலிப்பை வெச்சுக்கோங்க. திடீர்னு போன் வரும்... அங்க வந்திருங்க. அல்லது வீடுதேடி உங்களுக்கு வரும்' என்று சொல்லிவிட்டு ஆட்கள் போகிறார்கள். மக்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிட்டு வந்து ரசீதைக் கொடுத்தால், பணம் கிடைக்கும்.ரேசன் கார்டுக்கு 10 ஆயிரம், பூத்துக்கு தினமும் போனால் 300 ரூபாய் சம்பளம் என்று பரவும் வதந்திகளுக்கு அளவே இல்லை. இதில் எது உண்மை. எது வதந்தி என்று மக்களுக்குப் புரியவில்லை. திடீரென்று ஒரு கல்யாண மண்டபத்தின் பெயரைச் சொல்லி, அங்கு பணம் கொடுக்கிறார்கள் என்று தகவல் பரவி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். காட்டுத் தீ மாதிரி பரவும் செய்திகளை வைத்து கணக்குப் போட்டாலே 200 சிதாண்டுகிறது' என்கிறார் அரசியல் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் தொழிலதிபர் ஒருவர்.
இவை ஒருபக்கம் இருக்க, அடிதடிக்குப் பேர்போன தலைகளை அண்ணன் அழைத்துப் பேசுகிறார். "எனக்கு இது மானப் பிரச்சனை. இதுல நான் ஜெயிச்சா மட்டும்தான் உங்களுக்கு எதிர்காலம். இல்லைன்னா, உங்களோட வாழ்க்கையும் கேள்விக்குறிதான். அதுக்காக எத்தனை மாட்டிவிடுற மாதிரியான வம்பில் ஈடுபடாதீங்க" என்று கேட்டுக் கொண்டவர், தங்கள் பகுதியில் எதிரணிக்காக வேலை பார்க்கும் ஆட்களை மட்டும் அன்பாகக் கவனிக்கச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவரும் கட்சிக்காரர்களோடு சேர்த்து பூத் கமிட்டிகளுக்குள் நுழைக்கப்பட்டுள்ளார்கள். எதிரணி பிரச்சாரம் செய்ய வரும்போது, தங்கள் பூத்தில் இந்த ஆசாமிகள் உட்கார்ந்து பார்வையால் மிரட்டி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 வரை சம்பளம் தரப்படுகிறது. ஒரு பூத்துக்குத்தினமும் போய் செட்டில் ஆனாலே அன்றாட வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ற நிலை பல அல்லக்கைகளுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிற. இவர்கள்தான் தெருவுக்குள் வரும் எதிரணி ஆட்களது பெயரைக் கண்காணிக்கும் ஸ்பைகள்.இதற்கு நித்தமும் 500 வரை தரப்படுகிறது.
காசு தண்ணீராகச் செலவு செய்யப்படுவது போலவே, தங்கமாகச் சேகரிக்கவும் படுகிறது. எனவே, பல தொழிலதிபர்கள், வசூல் வெயிலுக்குப்பயந்து குளிர்ப்பிரதேசத்துக்குப்பதுங்கிவிட்டார்கள். ஒப்புக்குப் பணம் கொடுப்பவர்கள் அதட்டப்படுகிறார்கள். அதே போல் நான்கைத்து பேர் சேர்ந்து ஒரு தொகை கொடுப்பதையும், அண்ணன் ஏற்பதில்லை. '10 லட்சத்தை எடுத்துட்டு 20 வந்துட்டீங்களா?' என்று கேள்வி கேட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரேட் ஃபிக்ஸ் பண்ணி வசூலான கொடுமையும் நடந்திருக்கிறது. வசூலும் செலவுமாகக் கழிகிறது காலம்.
கிராமமாக இருந்தால் கோயில், நகரமாக இருந்தால் அதிகாலையில் பட்டுவாடா நடக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் சிலபகுதியில் போட்ட கவர்கள் சரியான நபர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்றுபுகார்கள் வந்தததால், இம்முறை பட்டுவாடா பொறுப்பு மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது நட்பு வட்டாரத்தை அவர் அரசியலுக்குள் கொண்டு வந்தார். 20 செல்போன்கள் இவர்களுக்கு முன் குவிந்துகிடக்கின்றன. கட்சிக்காரர்கள், பூத் ஏஜெண்ட்டுகள், பொதுமக்கள் என வைக்கப்பட்டிருக்கும் டெலிபோன் நம்பர் நோட்டைப் பார்த்து இந்த இளைஞரணி போன் போடுகிறது. 'உங்களுக்கு என்ன குறை? பணம் வந்து சேர்ந்துச்சா? என்று கேட்கிறார்கள். எதிரிடையாகப் பதில் வந்தால், சம்பந்தப்பட்ட தலைக்கு போன் செய்து திட்டுகிறார் மகன்.
இதனால் கலங்கிப் போயிருக்கிறார்கள். தேர்தல் பொறுப்பாளர்கள் வாங்கிய பணத்தை ஒழுங்காக சப்ளை செய்தாக வேண்டிய நெருக்கடி. ஒரே ஆள் மீது அதிக புகார் வந்தால், அப்பாவிடம் சொல்கிறார் மகன். மற்றபடி மனைவி, மகள், பிரச்சாரக் களத்தில் இருக்கிறார்கள். மகன் தலைமையிலான பறக்கும்படை செய்யும் காரியங்கள்தான் தனக்கான வெற்றியைத் தேடித் தம் என்று நம்புகிறார் அதிகார வேட்பாளர்.
பல்லாயிரம் கோடி பாயும் என்கிறார்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு அதைவிட அதிகமாக இருக்கிறதே!
No comments:
Post a Comment